ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்த இரண்டு இந்திய சரக்குக் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சான்மார் ஹெரால்டு’ மற்றும் ‘ஜக் அர்னவ்’ ஆகிய இரண்டு கப்பல்களும் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களை ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஈரானிய புரட்சிகர காவல்படையினரால் தடுக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின.

இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கப்பல்கள் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்ப வேண்டிய சூழல் உருவானது. அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் நிலவி வரும் சூழலில், இந்தத் தாக்குதல் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள ஈரானியத் தூதரை நேரில் அழைத்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஈரானிய தூதரைச் சந்தித்து இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து ஆழமான கவலையை வெளிப்படுத்தினார்.

இந்தியாவுடனான ஈரானின் நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இந்தியக் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க ஈரான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பதிலுக்கு ஈரானிய தூதர், இந்தியாவின் கோரிக்கையைத் தனது அரசுக்குத் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.