காரைக்கால் கடற்கரையில் பெற்றோரை பிரிந்து தவித்த சிறுவனை 2  மணி நேரம் போராடி போலீசார் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம்  விடுமுறை தினம் என்பதால் காரைக்கால் கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் குளித்து உற்சாகம் அடைந்தனர். அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் இருந்தது. இந்த நிலையில் தன்னந்தனியாக மூன்று வயது சிறுவன் அழுது கொண்டிருந்தான். சிறுவன் தேம்பி தேம்பி அழுவதை பார்த்ததும் போலீசார் உடனடியாக சிறுவனை தூக்கி சிறுவனின் பெயர் மற்ற விவரங்களை கேட்டுள்ளனர். ஆனால் சிறுவன் அழ தொடங்கியதால் போலீசார் சிறுவனுடன் விளையாடி அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி விட்டனர்.

ஆனால் சிறிது நேரத்தில் சிறுவன் மீண்டும் அழ ஆரம்பித்தான். இதனால் சிறுவனை தூக்கிக்கொண்டு கடற்கரை முழுவதும் போலீசார் பெற்றோரை தேடினர். இதற்கிடையே ஐஸ்கிரீம், பொம்மைகள் வாங்கி கொடுத்து சிறுவனை கவனித்துக் கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனை தூக்கிக்கொண்டு போலீசார் அலைந்த நிலையில் ஒரு கட்டத்தில் சிறுவனின் பெற்றோர் பதற்றத்துடன் வந்து எங்களது குழந்தை தான் . தவறுதலாக விட்டு விட்டோம் என அழுது புலம்பியுள்ளனர். தொடர்ந்து அவர்களை விசாரித்த பிறகு போலீசார் சிறுவனை ஒப்படைத்தனர். சிறுவனை தாய் உள்ளத்துடன் போலீசார் கவனித்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.