தலைநகரை சூழ்ந்துள்ள கடும் மாசு நெருக்கடி குறித்து, லண்டனில் வாழும் ஒரு இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரின் பதிவை சமூக ஊடகங்கள் வைரலாக்கியுள்ளன. டெல்லியில் வளர்ந்த அவர், சமீபத்தில் தாயகத்திற்கு வந்தபோது அனுபவித்த துயரத்தை பகிர்ந்திருந்தார். “டெல்லி காற்றின் தரம் ஒரு சுகாதார அவசரநிலை. மக்கள் உடனடியாக நகரத்தைவிட்டு வெளியேற வேண்டும்; தேவைப்பட்டால் கடனிலும் மூழ்குங்கள்” என்று அவர் தனது எக்ஸ் (X) பதிவில் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் தனது குழந்தைப்பருவமும், கல்வியும் கடந்துவிட்டதால் மாசு பிரச்சினைக்கு தன்னை எப்போதும் பழகியவன் என நினைத்திருந்த அவர், பல வருடங்கள் லண்டனில் சுத்தமான காற்றில் வாழ்ந்த பிறகு, இங்கு இறங்கிய தருணமே அதிர்ச்சியில் ஆழ்ந்ததாக பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் இறங்கிய உடனே காற்றின் கனமாசை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“AQI 200 எனும் நகர மக்கள் ‘சாதாரணம்’ என்று கருதும் நிலை கூட எனக்கு தாங்க முடியாதது. தொண்டை எரிச்சல், வலி, நுரையீரலில் ஊசிகள் பாய்வதைப் போன்ற உணர்வு—ஒவ்வொரு மூச்சிலும் உடலுக்குள் மாசு நுழைவதைக் கண்டேன்,” என்று அவர் எழுதியுள்ளார்.

 

பல ஆண்டுகளாக மக்கள் கடுமையான மாசை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டுவிட்டதே மிகப்பெரிய ஆபத்து என அவர் கூறுகிறார். டெல்லியில் வீடு வாங்குவது “அர்த்தமற்றது” என்றும், நீண்டகாலமாக இங்கு வாழ்வது உடல்நலத்துக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும் எச்சரிக்கிறார். அவ்வாறே, மும்பையிலும் குறையும் காற்றுத் தரம் குறித்து எச்சரிக்கை விடுத்த அவர், “உங்கள் நலனுக்காக பாதுகாப்பான சூழலுக்கு குடிபெயருங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார். மாசு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தனது இந்தியப் பயணத்தை குறைத்துவிட்டு, முன்கூட்டியே திரும்பிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் “தயவுசெய்து உங்கள் உடல்நலனுக்காக இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள்” என தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார்.