உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், “கங்கை தாயார் உங்கள் வீடு வரை வந்து உங்கள் கால்களை சுத்தம் செய்ய ஆசிர்வாதமாக வந்திருக்கிறார்.

இது ஒரு புனித வாய்ப்பு, இது சொர்க்க வாசல்,” என கூறினார். அமைச்சரின் இந்த உரை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் அவரது பேச்சுக்கு அருகில் இருந்த வயதான  பெண், “அப்படி என்றால் நீங்களே இங்கேயே தங்கி அந்த ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்” எனத் தரமான பதில் கொடுத்ததோடு, அவரது பேச்சை பொதுமக்கள் முன்னிலையில் கேலி செய்துவிட்டார்.

இந்த விவகாரம் அரசியலில் பேசும் பொருளாக  மாறிஉள்ளது . சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சர்வேந்திர பிக்ரம் சிங், “இந்த பேச்சு ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதியின் உணர்வற்ற தன்மையை காட்டுகிறது. அரசு நிவாரணம் தர தவறி, மக்களை காயப்படுத்தும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார். காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் ராய், “இது மாதிரியான வார்த்தைகள் மக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது அரசின் தளர்வைக் காட்டுகிறது” எனக் குற்றம்சாட்டினார்.

“>

 

இதற்குப் பதிலளித்த சஞ்சய் நிஷாத், “நான் வெள்ளம் ஒரு வருட பிரச்சனை அல்ல என்பதை வலியுறுத்தவே இப்படிப் பேசினேன். மக்கள் மனதில் நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் விதைக்கவே சொன்னேன். எதிர்க்கட்சிகள் எதையும் அரசியல் வாதமாக்க முயல்கின்றன.

நான் மக்களுக்கு உணர்ச்சிபூர்வ ஆதரவு அளித்தேன், மற்றபடி அது ஒரு சாமானிய உரையாடல் மட்டுமே” என விளக்கம் அளித்தார். இருந்தாலும், கங்கை பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “வாழ்கை அல்ல, ஆசிர்வாதம்” என அமைச்சர் கூறுவது, மக்களிடையே வன்மையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.