தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் திமுக கட்சியின் உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பது மற்றும் கட்சியில் இணைய செய்வதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதனை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, கர்மவீரர் காமராஜர் குறித்து விதவிதமாக அவதூறு பேசியவர்கள் திமுகவினர்தான். இன்று இந்த விவகாரம் பெரிதாக விட்டதால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதனை பெரிது படுத்த வேண்டாம் எனக் கூறும் நிலையில் காங்கிரஸ் இதை பற்றி பேசவில்லை. திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு அமைப்பில் இணைந்தால் மட்டும்தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என பகிரங்கமாக மக்களை மிரட்டி திமுகவினர் கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாம்பழம் விற்பது போல் கூவி கூவி மக்களை அழைக்கிறார்கள். மேலும் வருகிற தேர்தல் என்பது சட்டம் ஒழுங்கை மையப்படுத்தும் தேர்தலாக இருக்கும் என்றார்.