சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொகுதி பங்கீடு என்ற கடினமான வேலை முடிந்துள்ளது. 39 தொகுதிகளிலும் தகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு விவரங்களை டெல்லியில் உள்ள பாஜக தலைமை வெளியிடும். பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று மாலை முதல் எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். பாஜக வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை எந்த நேரமும் அறிவிக்கலாம். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. பாஜக 20 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு 3  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு பாஜக சீட்டு ஒதுக்கவில்லை. ஓபிஎஸ் தனது முடிவை அறிவிக்காத நிலையில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓபிஎஸ்க்கு ஒரு தொகுதி ஒதுக்கியதாகவும், அதுவும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பாஜக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஓபிஎஸ் – பாஜக கூட்டணி உறுதியாகவில்லை. தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவரும் ஓபிஎஸ் இன்று மாலை இதுகுறித்து அறிவிப்பு ஏதேனும் வெளியிட வாய்ப்புள்ளது.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.