அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை எங்கிருந்து ஒன்றிணைப்பது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவர மறுக்கிறார். முழு முயற்சியும் நாங்கள் எடுத்து விட்டோம். நான் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை விட்டு தூரமாக இருந்தாலும் ஆர்பி உதயகுமார் சொல்வது சரியாக இல்லை. சில உண்மைகளை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். ஓபிஎஸ் மிகவும் நல்லவர், ஆனால் வல்லவர் கிடையாது. அதனால்தான் அவரால் வெற்றி பெற முடியவில்லை, ஓபிஎஸ் மீது அம்மா கோபமாக இருந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை உதயகுமார் முன்வைக்கிறார்.

ஓபிஎஸ்ஐ கொசு என்கின்றார். கொசு மிகவும் ஆபத்தானது. மலேரியா மற்றும் டெங்கு போன்றவை கொசுவில் இருந்து தான் வரும். நாங்கள் இல்லாத தைரியத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் என்ற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது. அதிமுக ஒற்றுமையாக இல்லாவிட்டால் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு 26 தொகுதிகள் கூட கிடைக்காமல் போகும். இரட்டை இலை வழக்கை பார்த்து இபிஎஸ்ஸுக்கு பயம் வந்துவிட்டது. நான் நினைத்திருந்தால் அம்மாவிடம் பேசி எங்கேயோ சென்று இருக்கலாம். ஆனால் நான் அதற்காக ஆசைப்படவில்லை என்று புகழேந்தி பேசியுள்ளார்.