முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவை “தவறான முடிவு” எனக் கடுமையாகச் சாடியுள்ள அவரது முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் அரசியல் பயணத்தை மாற்றுப் பாதையில் தொடரத் தீர்மானித்துள்ளனர்.
இது குறிப்பாக, தி.மு.க-விற்குச் செல்வது அ.தி.மு.க-வின் அடிப்படை கொள்கைகளுக்கே எதிரானது எனக் கருதும் அவர்கள், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தி.மு.க-வில் இணைவதை விட ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளனர். “தாய் கழகமான அ.தி.மு.க-வின் அடையாளத்தைக் காக்கப் போராடிய ஓ.பி.எஸ், இறுதியில் தி.மு.க-விலேயே இணைந்துவிட்டது.
மேலும் எங்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது” என்று குமுறும் தொண்டர்கள், ஊழலற்ற மற்றும் வெளிப்படையான அரசியலை முன்னெடுக்கும் விஜய்யின் ‘தவெக’ கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஓ.பி.எஸ் அணியில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
