சமூக வலைதளங்களில் சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பிளாட்பாரத்தில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, ஆக்ரோஷமாக ஓடிவரும் காளை ஒன்று திடீரென ரயிலுக்குள் பாயும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரயிலுக்குள் நுழைய முயன்று முடியாமல் கீழே விழும் அந்த காளை, பின்னர் அமைதியாக எழுந்து நடப்பதும், அதே சமயம் அந்த ரயில் திடீரென பின்னோக்கி (Reverse) ஓடுவதும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வந்தாலும், இது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவில் காளை ரயிலில் மோதி கீழே விழுந்த பிறகும் அங்கிருந்த மக்கள் யாரும் பயப்படாமல் மிக அருகிலேயே நின்று வீடியோ எடுப்பதும், ரயில் அதன் திசையை மாற்றி பின்னோக்கி ஓடுவதும் இது ஒரு போலி வீடியோ என்பதை உறுதிப்படுத்துகின்றன.

நிஜத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் மக்கள் அலறியடித்து ஓடியிருப்பார்கள், ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இது பார்ப்பதற்கு அப்படியே உண்மையான சம்பவம் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

“பார்க்கவே மிரட்டலாக இருக்கிறது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு காண்டாமிருகம் ஒன்று சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைத் தாக்கும் வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.