தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள வாங்கப்பள்ளி – அலேர் ரயில் பாதையில், ஓடும் ரயிலில் இருந்து விழுந்து புதுமணத் தம்பதியினர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், ஆந்திரப் பிரதேசம் ராவுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொரடா சிம்மாசலம் (25) மற்றும் அவரது மனைவி பவானி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடைபெற்று சுமார் இரண்டு மாதங்களே ஆன நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இந்த தம்பதியினர் செகந்திராபாத்திலிருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, உறவினர்களை சந்திப்பதற்காக விஜயவாடா நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். ரயில் யாதகிரிகுட்டா மண்டலத்தில் உள்ள வாங்கப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்த பின்னர், ரயில் பெட்டியின் வாசல் அருகே நின்றிருந்தபோது, தற்செயலாக இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
రైలు నుంచి పడి నవ దంపతులు మృతిచెందిన ఘటనలో ట్విస్ట్
మృతికి ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు
యాదాద్రి భువనగిరి జిల్లా వంగపల్లి – ఆలేరు రైలుమార్గంలో కింద పడి మృతి చెందిన దంపతులు
అయితే, ఈ ఘటనకు ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు
దీంతో భర్తతో గొడవ పడి క్షణికావేశంలో ముందుగా రన్నింగ్… https://t.co/2LvgY9SzG6 pic.twitter.com/fp3st5HCZp
— Telugu Scribe (@TeluguScribe) December 20, 2025
வெள்ளிக்கிழமை அதிகாலை ரயில் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தண்டவாளத்தில் இருவரின் உடல்களைக் கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரயிலுக்குள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதையடுத்து, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில், தம்பதியினர் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாகவும், இருவரும் பதற்றமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிகிறது.
மேலும் வீடியோ உண்மையானதா, அது சம்பவத்திற்கு முன்பு எப்போது பதிவு செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட அம்சங்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் விபத்தா, அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
