தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி தம்பதிக்கு, கடந்த சனிக்கிழமை அன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் பிறந்திருப்பதை மெகா ஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், இந்த புதிய வரவு தங்கள் குடும்பத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியையும் இறைவனின் ஆசீர்வாதத்தையும் கொண்டு வந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2025-ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் உபாசனா தனது வளைகாப்பு வீடியோவைப் பகிர்ந்து ‘இரட்டிப்பு கொண்டாட்டம்’ என சூசகமாகத் தெரிவித்திருந்தது தற்போது உண்மையாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு, 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் க்ளின் காரா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது இரட்டை குழந்தைகளின் வருகையோடு ராம் சரண் – உபாசனா தம்பதி மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோராக உயர்ந்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்ட மெகா குடும்ப ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தைகளை வரவேற்க குடும்பத்தினர் உற்சாகமாகத் தயாராகியுள்ளனர். தனது குழந்தைகளை சமூகப் பொறுப்புணர்வுடன் வளர்க்க விரும்புவதாக உபாசனா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.