பீகார் மாநிலம்  ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வந்த கவுதம் என்ற இளைஞர், தன்னுடைய பழைய  காதலியுடன் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் அதே பெண்ணின் புதிய காதலன் அபிஷேக்குக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் அந்த பெண் கவுதமுடன் தொடர்பைத் தொடர்ந்ததால், அபிஷேக் கடும் கோபமடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதமுடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அபிஷேக், பின்னர் துப்பாக்கியுடன் திரும்பி வந்து, கவுதமின் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த கவுதம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தையடுத்து,முக்கிய  குற்றவாளி அபிஷேக்  போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த மற்ற இரண்டு கூட்டாளிகள் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசார் சோதனை செய்தபோது, அபிஷேக்கின் வீட்டிலிருந்து பிஸ்டல், தோட்டாக்கள் மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

காதல் மூலமாக ஏற்பட்ட இந்த கோர சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஒரே பெண்ணுடன் இரு இளைஞர்களுக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த பெண் இருவருடன் பேசியதாலேயே இத்தகைய கொடூர நிலைமை ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் முழு விசாரணையை மேற்கொண்டு, காதல் முரண்பாடு அடிப்படையில் கொலை முயற்சி நடந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் காதல் தொடர்புகளில் ஏற்படும் முரண்பாடுகள் எவ்வளவு மோசமான முடிவை எடுக்கச் செய்யும் என்பதற்கான முன்னெச்சரிக்கை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.