சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் செல்வதால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக பண்டிகை காலங்களில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக கடந்த வாரம் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது. இதனையடுத்து பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையை இன்று மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 2,66,494 பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 14-ஆம் தேதி 1.62 லட்சம் பேரும், ஜனவரி 15-ஆம் தேதி 1.08 லட்சம் பேரும், ஜனவரி 16-ஆம் தேதி 1.34 லட்சம் பேரும், ஜனவரி 17-ஆம் தேதி 1.65 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 13-ஆம் தேதி அதிகபட்சமாக 21,731 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.