ஈரானுடனான பதற்றம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தனக்கு அவசரமில்லை என்றும், ஒரு நிலையான மற்றும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். என்னால் இப்போதே ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியும், ஆனால் அது காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் உடன்பட மறுத்தால் ராணுவ ரீதியாக இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், சாதாரண போர் முறையிலேயே அவர்களை முற்றிலுமாக அழிக்கும் வலிமை அமெரிக்காவிடம் இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் தலைமை தற்போது குழப்பத்தில் இருப்பதாகவும், தங்களுக்குள்ளேயே அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகவும் சாடிய அவர், ஈரானின் ஆயுதக் கிடங்குகளை ஒரே நாளுக்குள் அழித்துவிட அமெரிக்க ராணுவத்தால் முடியும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
