டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ‘புளோரிஷ் ஸ்டே ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து, குருகிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரின் உயிரைப் பறித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்கள் குடும்பத் தலைவரைப் பார்க்க வந்த அந்த குடும்பத்தினர், ஹோட்டலில் தங்கியிருந்தபோது விபத்தில் சிக்கினர்.

மேலும் விபத்தின்போது, விவேக் அகர்வால் என்ற குடும்ப உறுப்பினர் தனது உறவினரிடம் போனில் பேசுகையில், “சகோதரரே, ஒருவேளை நாங்கள் பிழைக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்” என்று கூறிய கடைசி வார்த்தைகள் காண்போரை உலுக்கியது.

இந்த விபத்தில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த ஹோட்டல் முறையான தீயணைப்புத் துறை சான்றிதழ் பெறாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான அறைகளுடன், பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறுகிய வழித்தடங்கள் மற்றும் ஒரே ஒரு நுழைவு-வெளியேறும் வழி மட்டுமே இருந்ததால், அங்கிருந்தவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளே இந்த துயரமான மரணங்களுக்குக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.