கொல்கத்தாவில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணை நம்பிச் சென்ற இளைஞர் ஒருவர், ‘காதல்’ என்ற போர்வையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு மோசடியில் சிக்கி 8,500 ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பம்பிள் செயலி மூலம் பழகிய அந்தப் பெண், இளைஞரை ஒரு குறிப்பிட்ட உணவகத்திற்கு அழைத்துச் சென்று மிகக் குறுகிய நேரத்தில் அதிக விலையுள்ள மதுபானங்கள் மற்றும் உணவுகளை ஆர்டர் செய்துள்ளார்.
மேலும் உணவு முடிந்து சுமார் 8,500 ரூபாய்க்கான ரசீது வந்தவுடன், அந்தப் பெண் அங்கிருந்து நழுவியதோடு, வெளியே செல்லும்போது இளைஞரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், இந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.
இதனால் அன்பின் முகமூடி அணிந்த திட்டமிடப்பட்ட மோசடி’என வர்ணிக்கப்படும் இச்சம்பவம், கொல்கத்தாவின் உணவகங்களில் ஒரு கும்பல் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட உணவகங்களுடன் ரகசிய ஒப்பந்தம் வைத்துக்கொண்டு, இதுபோன்ற பெண்கள் அப்பாவி இளைஞர்களை வரவழைத்து அதிக கட்டணம் செலுத்த வைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள் முன்பின் தெரியாதவர்களைச் சந்திக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக அவர்கள் கட்டாயப்படுத்தும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
