திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் தனது ‘ஆக்‌ஷன்’ குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கலகலப்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று (மார்ச் 5) நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், தொகுதிப் பங்கீடு குறித்த சுவாரசியமான பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “நேற்று (மார்ச் 4) இரவு வரை கூட்டணிக் கட்சியுடன் பேசி, வெற்றிகரமான முறையில் ஒப்பந்தத்தை முடித்துவிட்டுத்தான் இந்த விழாவிற்கு வந்துள்ளேன். நான் காரில் ஏறும்போது கையை உயர்த்திச் செய்த செய்கை (Action) இன்று வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்”.

மேலும் அந்த வைரல் செய்கை குறித்து மேலும் விளக்கிய அவர், “அது திட்டமிட்டுச் செய்ததல்ல. நான் காரில் ஏறச் சென்றபோது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் ‘முடிந்துவிட்டதா?’ என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாக ‘முடிந்துவிட்டது’ என்று கையை அசைத்தேன். அது இன்று ‘ஆல் ஃபினிஷ்’ (All Finish) என்ற தோனியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த மகிழ்ச்சியோடுதான் இந்தத் திருமண விழாவிற்கு வந்துள்ளேன்” என்றார்.