அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பயின்று வந்த ஆதித்யா பிரகாஷ் மற்றும் ஊர்மி பட்டாச்சார்யா ஆகிய இரண்டு இந்திய மாணவர்கள், அங்கு தங்களுக்கு நேர்ந்த இனப்பாகுபாட்டிற்கு எதிராக போராடி 2 லட்சம் டாலர் (சுமார் ₹1.8 கோடி) இழப்பீடு பெற்றுள்ளனர். 2023-ம் ஆண்டு ஆதித்யா பல்கலைக்கழகத்தின் பொது சமையலறையில் ‘பாலக் பனீர்’ உணவை சூடுபடுத்தியபோது, அங்கிருந்த ஊழியர் ஒருவர் அதன் மணம் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி அவரை தடுத்துள்ளார்.
இந்தச் சாதாரண உணவுப் பிரச்சனை பின்னர் பெரிய விவாதமாக மாறி, அந்த மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததோடு, அவர்களின் முதுகலைப் பட்டங்களையும் வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
தங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி மற்றும் கலாச்சார ரீதியான பாகுபாட்டை எதிர்த்து அந்த மாணவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பல்கலைக்கழகம், இறுதியில் மாணவர்களுடன் சமரசத்திற்கு வந்து 2025-ல் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதோடு, அவர்களின் தகுதியான முதுகலைப் பட்டங்களையும் முறைப்படி வழங்கியது.
“எனது உணவு எனது பெருமை” என்று கூறிய மாணவர்கள், சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிராக தங்களின் குரலை ஓங்கி ஒலித்துள்ளனர். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இனி அந்தப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணிபுரியவோ அல்லது கல்வி கற்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
