யுடியூப் சேனல்கள் பரப்பும் அவதூறு செய்திகள் குறித்து தாங்கள் கவலைப்படப் போவதில்லை என்றும், தேமுதிக மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டையும் யாராலும் சுமத்த முடியாது என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, தேமுதிக தொடங்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிறது. கடந்த காலங்களில் 29 எம்.எல்.ஏ.க்களுடன் கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டமன்றத்தை அலங்கரித்துள்ளார். இன்று வரை எங்கள் கட்சி மீது லஞ்ச ஊழல், சொத்துக்குவிப்பு, கள்ளச்சாராயம் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் கைது என எந்த ஒரு கரும்புள்ளியையும் யாராலும் குத்திக் காட்ட முடியுமா?
அன்று கேப்டனைப் பற்றித் தவறான பிம்பத்தை ஏற்படுத்தி எப்படி நெகட்டிவாகச் சித்தரித்தார்களோ, அதேபோல் இன்று எங்களைப் பற்றியும் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். ‘பெட்டி’, ‘பேரம்’ என்பதைத் தாண்டி எங்களைப் பற்றிச் சொல்ல அவர்களுக்கு வேறு ஒன்றும் இல்லை. அண்மையில் எனது குடும்பத்தினர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய காரை, இப்போது வாங்கியது போலவும் தவறான கண்ணோட்டத்திலும் செய்திகள் வெளியிடுகின்றனர். ஒரு கார் வாங்கும் தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?
கேப்டன் தான் சம்பாதித்த சொத்தில் 90 சதவீதத்தை மக்களுக்காகவே செலவு செய்தவர். வாரி வழங்கிய அந்தச் சிவந்த கரங்களுக்குப் பின்னால் நான் உறுதுணையாக இருந்தேன் என்பது இந்த உலகிற்குத் தெரியும். குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும், குரைக்கிற நாய் குரைக்கட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.”
மேலும் மிகக் குறைவான வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிக்கு எதற்கு இத்தனை இடங்கள் என விவாதிக்கும் யுடியூப் சேனல்கள், தேமுதிகவைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டியதுதானே? எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. தெரியாமல் பேசுவது முறையல்ல. வாழ்த்துவோர் வாழ்த்தட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். எல்லா புகழும் எங்கள் கேப்டனுக்கே என்று கூறினார்.
