மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். மேலும், அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் மேல்மட்டம் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை தற்போது மிக நெருக்கமாகிவிட்டதாகவும், 99.9 சதவீத ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்துவிட்டதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், பாஜக மூலமாக அதிமுகவிடம் பேசி தங்களுக்குத் தேவையான தொகுதிகளை நல்ல முறையில் ஒதுக்கீடு செய்துகொள்வோம் எனக் கூறினார். தற்போது ஒதுங்கியிருப்பவர்கள் (ஓபிஎஸ், சசிகலா போன்றவர்கள்) திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவார்கள் என்றும், யாரோ ஒருசிலர் ஒதுங்கி இருப்பதால் பெரிய மாற்றம் ஏதும் நடந்துவிடாது என்றும் அவர் வெளிப்படையாகக் கூறினார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்பதாகத் தகவல் வருவதையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.
