பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளதால், கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது மிகவும் பரிதாபமானதாக இருக்கிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் எல்லையை அண்டிய பங்கா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மகேஷ் குமார் என்பவர் தனது செயற்கை காலின் உள்ளே வெளிநாட்டு மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் வழக்கமான சோதனையின் போது இளைஞரை பிடித்து விசாரித்தபோது, செயற்கை காலுக்குள் மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஸ்கூட்டியைச் சோதனையிட்ட போலீசார், அதில் கூடுதலாக 15 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
