இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்குப் பிறகு ஓராண்டிற்கும் மேலாக இந்திய அணியில் இடம் பெறாமல் தவித்து வருகிறார். இடையில் ஏற்பட்ட காயம் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் உடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், உள்நாட்டுப் போட்டிகளில் பெங்கால் அணிக்காக விளையாடி 67 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷமி, தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஷமி, “எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அன்றுதான் கிரிக்கெட்டை விட்டு விலகுவேன்; இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் துளியும் இல்லை” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், இந்த ஆண்டு லக்னோ அணிக்காகத் தனது முழு பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியில் இளம் வீரர்களின் வருகை அதிகரித்துள்ள போதிலும், தனது சிறப்பான பந்துவீச்சு லயம் அப்படியே இருப்பதாகவும், தனது தன்னம்பிக்கையே தன்னைத் தொடர்ந்து விளையாட வைப்பதாகவும் ஷமி உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.