
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்மோதியது. இதில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
அப்துல் சமதுவும் புவனேஷ்வர் குமாரும் களத்தில் இருந்தபோது அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லாத நிலையில் இரண்டாவது பந்தில் சமத் ரன் அவுட் ஆனார். அடுத்த இரண்டு பந்துகளில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. 5வது பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர், ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் அணி 19.5 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அர்ஜுன் டெண்டுல்கர் 2.5 ஓவர்கள் வீசி 6.35 எகனாமியில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.. இந்தத் தொடரில் இது அவருக்கு இரண்டாவது போட்டியாகும். முதல் விக்கெட்டை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கரை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.