நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ள 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 404 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசுர வேக ஃபார்மைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், அவரை விரைவில் இந்தியத் தேசிய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் நிதானமாக பதிலளித்தார். நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பதில்லை. தொலைக்காட்சியில் அவ்வப்போது தெரிவதை மட்டுமே பார்க்கிறேன். எனவே, ஒரு வீரரைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் கருத்து கூறுவது சரியாக இருக்காது. சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் ஹர்ஷா போக்லே போன்ற வல்லுநர்கள் இவரைப் பற்றி இன்னும் சிறப்பாகக் கணிப்பார்கள் என்றார்.

கபில் தேவ் இப்போதைக்கு கருத்து கூறத் தயங்கினாலும், மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷி காட்டி வரும் அதிரடி, அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரம் என்பதை உரக்கச் சொல்லி வருகிறது.