ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையுமே தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கியுள்ள இவர், 10 போட்டிகளில் 404 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார்.

குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாகச் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள், இவரை உடனே இந்திய தேசிய அணியில் சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் வைபவ் குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் மிகவும் நேர்மையாகவும் அப்பட்டமாகவும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். “நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பதில்லை, அதனால் முழுமையான விவரம் தெரியாமல் ஒரு வீரரைப் பற்றி விமர்சிப்பது சரியாக இருக்காது” என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

மேலும், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற வல்லுநர்கள் இவரை இன்னும் சிறப்பாகப் பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும், தான் தொலைக்காட்சியில் பார்ப்பதை வைத்து மட்டும் ஒரு முடிவுக்கு வர முடியாது என்றும் கபில் தேவ்  பதிலளித்துள்ளார். கபில்தேவ் கருத்து கூறத் தயங்கினாலும், வைபவ் சூர்யவன்ஷியின் மட்டை வீச்சு மைதானத்தில் ரன் மழையைத் தூவி தனது திறமையை நிரூபித்து வருகிறது.