தற்போது உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிக பிரபலமாகிப் போனது. IPL போன்ற லீக்குகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் அதிரடி பேட்ஸ்மன் டிராவிஸ் ஹெட்ஸுக்கு, சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விட்டு வருடம் முழுவதும் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் படியாக ஆண்டுக்கு ரூ.58 கோடி (10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) சம்பளத்துடன் சலுகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சிக்குரிய தகவலை சிட்னி மோர்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது. தற்போது கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக கேப்டனாக விளையாடி வருகிறார், அவருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.26 கோடி மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. ஹெட்ஸும் அனைத்து வடிவங்களிலும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறார். எனினும், அவர்கள் இந்த பிரபல ஃபிராஞ்சைசி நிறுவனம் வைத்த சலுகையை நிராகரித்துள்ளனர்.
இதுபோல், முன்பு 2023-ல் ஜொஃப்ரா ஆர்ச்சரும் மும்பை இந்தியன்ஸ் நிறுவனத்திடமிருந்து வந்த இவ்வாறான ஓர் பிரைவேட் ஆஃபரைக் கட்டுப்பாட்டுடன் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பிக்பாஷ் லீக் போன்ற ஆஸ்திரேலிய உள்நாட்டு தொடர்களை பிரைவேட் ஃபிராஞ்சைசி மாடலாக மாற்றுவதற்கான பேச்சுகளும் இப்போது தீவிரமடைந்து வருகின்றன.
ஐபிஎல் 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இருவரும் விளையாடிய நிலையில், கம்மின்ஸ் ₹20.5 கோடிக்கு ஒப்பந்தமாகி அணியின் கேப்டனாக இருந்தார். ஹெட்ஸும் ₹14 கோடிக்கு ரீடேன் செய்யப்பட்டிருந்தார். இது போன்ற சலுகைகள் வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டின் நிலையை மாற்றி அமைக்கக் கூடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
