2025-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விரும்பிச் சென்ற வெளிநாடுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 2025-ஆம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண ஆர்வம் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வழக்கமான சுற்றுலா தலங்களைத் தவிர, ஜப்பான், தென் கொரியா, ஜார்ஜியா போன்ற புதிய நாடுகளையும் இந்தியர்கள் ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்திருந்தாலும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இப்போதும் பாரம்பரியமான சில நாடுகளே முதலிடங்களில் நீடிக்கின்றன.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டு இந்தியர்கள் அதிகம் பயணித்த முதல் 10 நாடுகள் வருமாறு:

இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் சென்ற நாடாக ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுலா, தொழில் நிமித்தமான பயணங்கள் மற்றும் அங்கு வசிக்கும் உறவினர்களைச் சந்திப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த ஆண்டு மட்டும் சுமார் 7.78 மில்லியன் (77 லட்சம்) இந்தியர்கள் அமீரகத்துக்குப் பயணம் செய்துள்ளனர்.
துபாய், அபுதாபி ஆகிய நகரங்கள் இந்தியர்களின் விருப்பமான இடங்களாகத் தொடர்ந்து உள்ளன.

சவுதி அரேபியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹஜ், உம்ரா போன்ற புனிதப் பயணங்கள் மட்டுமின்றி, தொழில் மற்றும் குடும்பச் சுற்றுலாவுக்காகவும் சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் இந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்.

சுற்றுலா, உயர்கல்வி மற்றும் குடும்ப உறவுகளைச் சந்திப்பதற்கான பயணங்களில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. டிரம்ப் அரசின் கடுமையான குடியேற்ற மற்றும் விசா கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு சுமார் 2.14 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் திகழும் தாய்லாந்து நான்காவது இடத்தில் உள்ளது. ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக சுமார் 1.91 மில்லியன் இந்தியர்கள் இவ்வாண்டு தாய்லாந்தைச் சென்றடைந்துள்ளனர்.

பாதுகாப்பு, எளிதான போக்குவரத்து, குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய இடங்கள் அதிகம் இருப்பதால் சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களைப் பார்வையிடுவதற்கும், கல்வி மற்றும் வணிகத் தேவைகளுக்காகவும் இந்தியர்கள் பிரிட்டனை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் பிரிட்டன் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கத்தார் ஏழாவது இடத்தில் உள்ளது. எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் மற்றும் தோஹா வழியாக உள்ள சர்வதேச விமான இணைப்புகள் காரணமாக, இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா மற்றும் அங்கு குடியேறியுள்ள உறவினர்களைச் சந்திப்பதற்காக கனடா இப்போதும் இந்தியர்களின் விருப்பமான நாடாகவே நீடிக்கிறது. இதன் மூலம் கனடா எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் கலாச்சார அனுபவங்களுக்காக இந்தியர்கள் ஓமனை தேர்ந்தெடுத்துள்ளனர். விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும், இந்தியர்களின் பயண எண்ணிக்கையை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பட்ஜெட் பயணங்கள் மற்றும் குடும்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற நாடாக விளங்கும் மலேசியா, இந்த பட்டியலில் 10-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மொத்தத்தில், 2025-ஆம் ஆண்டு இந்தியர்களின் வெளிநாட்டு சுற்றுலா ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், பாரம்பரிய நாடுகளுடன் சேர்ந்து புதிய சுற்றுலா தலங்களையும் இந்தியர்கள் ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.