பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அரசு அலுவலகங்களில் வேலை செய்த ஆங்கிலேயர்களுக்கும், கிறிஸ்தவ அதிகாரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை இருந்தது. அவர்கள் அந்த நாளில் தேவாலயத்திற்கு (Church) சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காக இந்தச் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், அதே அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்த இந்தியத் தொழிலாளர்களுக்கு வாரம் முழுவதும் வேலை இருந்தது. அவர்களுக்கு வார விடுமுறையே கிடையாது.

இதை எதிர்த்துத் தான் நாராயண் மேகாஜி லோகண்டே குரல் கொடுத்தார். “கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்திற்காக ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுக்கும்போது, இந்தியர்களாகிய எங்களுக்கும் எங்கள் குடும்பத்தை கவனிக்கவும், இறைவனை வழிபடவும் ஒரு நாள் விடுமுறை வேண்டும்” என்று வாதிட்டார். 1881-லேயே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்த அவர், 1890-ல் தான் வெற்றிகண்டார். இந்தியத் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கண்டு மிரண்டு போன பிரிட்டிஷ் அரசு, கடைசியில் அனைவருக்கும் பொதுவான விடுமுறையாக ஞாயிற்றுக்கிழமையை அறிவித்தது.