குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில், தேர்வு எழுத தாமதமாக வந்ததைக் கேள்வி கேட்ட ஆசிரியைக்கு, 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சமஹால் மாவட்டம் ஷேரா பகுதியில் உள்ள எஸ்.ஜே. டேவ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட முன்னோட்டத் தேர்வு (Prelim Exam) நடைபெற்றது. அந்தத் தேர்வுக்கு மாணவர் ஒருவர் மிகவும் தாமதமாக வந்துள்ளார். அங்கிருந்த பெண் ஆசிரியை, தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டபோது அந்த மாணவர் ஆத்திரமடைந்துள்ளார்.
“என் வீட்டிலேயே யாரும் என்னிடம் கேள்வி கேட்பதில்லை, என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்?” என்று ஆசிரியைரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தேர்வுக் அறைக்குள் நுழைந்த அந்த மாணவர் ஆசிரியைருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், திடீரென ஆசிரியைரின் கன்னத்தில் பலமாக அறைந்து அவரைத் தள்ளிவிடுவதும் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர்.
View this post on Instagram
சம்பவம் நடந்த அன்று மாணவரின் தந்தை பள்ளிக்கு வந்து ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ஜனவரி 27-ஆம் தேதி அந்த மாணவர் தனது தந்தை மற்றும் 20-க்கும் மேற்பட்டோருடன் மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, “நீ இந்த ஊரில் தனியாகத்தானே வசிக்கிறாய், உன்னை கவனித்துக் கொள்கிறோம்” என்று அந்த ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 3-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 18 வயதான முகமது கான் அன்சாரி என்ற அந்த மாணவரைப் போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாணவருக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
