மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில், பிரசார மேடைக்கு காரில் வர முயன்ற பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசனை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாகக் கடிந்துகொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலைக் கண்டு காரில் இருந்து இறங்கிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திடீரென போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, பிரசார மேடையை நோக்கி காரில் வர முயன்ற வானதி சீனிவாசனின் வாகனத்தை பியூஷ் கோயல் தடுத்து நிறுத்தினார்.

வாகனத்தை நிறுத்திய அவர், “நாம ஒன்னும் விஐபி கிடையாது” என்று கோபத்துடன் கடிந்துகொண்டார். அதற்கு வானதி சீனிவாசன் ஏதோ பதிலளிக்க முயலவே, பியூஷ் கோயல் அவரை முறைத்துப் பார்த்தார். பின்னர் வானதி சீனிவாசன் தனது காரில் இருந்து இறங்கி, நடந்து மேடைக்குச் சென்றார். இந்த பரபரப்பான காட்சி அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.