இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் வங்கி சார்ந்த பணிகள் எளிதில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் கடன் பெறுவது கூட ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதால் கடன் தேவைப்படும் நபர்களை குறிவைத்து பல மொபைல் செயலிகள் தற்போது உருவாகிவிட்டது.

அரசு ஒழுங்குபடுத்தப்படாத பல நிறுவனங்கள் மக்களுக்கு எளிய முறையில் கடன்களை வழங்கும் நிலையில் இதில் எளிதில் கடன் கிடைக்கும் என்பதற்காக பலர் கடனைப் பெற்று அதனை திரும்ப கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடனை திரும்பப் பெறும்போது அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் மிக கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இதனால் பலரும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சூழ்நிலை ஏற்படுவதால் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.