மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் 55 வயதான பள்ளி முதல்வர் ஒருவர் வகுப்பறையில் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றோரிடம் கூற அவர்கள் கிராமத்தில் உள்ள சிலரிடம் கூற இந்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியுள்ளது. இதனை அறிந்த கல்வி அதிகாரி மூன்று ஆசிரியர்களை பள்ளிக்கு அனுப்பி விசாரிக்க அறிவுறுத்தியுள்ளார்.
அங்கு சென்று ஆசிரியர்கள் பள்ளி முதல்வர் மது போதையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரால் சரியாக பேச முடியாத நிலையில் இருந்ததை காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து மாலையில் வீட்டிற்கு சென்ற முதல்வர் அடுத்த நாள் காலையில் தனது அறையில் இருந்து வெளியில் வராமல் இருந்துள்ளார்.
குடும்பத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரினால் பயந்து அவர் இத்தகைய முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
