ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள RUHSCMS மருத்துவமனையில் பாஜகவின் சேவா பக்வாடா நிகழ்ச்சியின் போது நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், ஒரு பாஜக பெண் தொண்டர் ஒரு நோயாளிக்கு 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்து, புகைப்படம் எடுத்தவுடன் அதை மீண்டும் வாங்கி சென்றார். இந்தச் செயல் கேமராவில் பதிவாகி, இப்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பலர், இது ஏழை மற்றும் நோயாளிகளை பயன்படுத்தி புகைப்படத்திற்காக மட்டுமே செய்யப்பட்ட செயல் என்று குற்றம்சாட்டியுள்ளனர். சிலர் இதை “மார்க்கெட்டிங் ஸ்டண்ட்” என்றும், மற்றவர்கள் “மலிவான செயல்” என்றும் விமர்சித்து, கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி உள்ளூர் பாஜக வார்டு ஒருங்கிணைப்பாளர் வீரேந்திர சிங் தலைமையில் நடைபெற்றது. சேவா பக்வாடா நிகழ்ச்சி மகாத்மா காந்தி ஜெயந்தி அன்று முடிவடைந்தது, ஆனால் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.