திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து மிக வெளிப்படையாக தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். “நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை, அது முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும். எனவே, இந்தத் தோல்விக்கு கழகத் தலைவர் என்ற முறையில் நானே முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியது அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் எங்கு கோளாறு நடந்தது, யாரிடம் மெத்தனம் ஏற்பட்டது என்பதுதான் இப்போது மிக முக்கியம் என்று சுட்டிக்காட்டினார். யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட ஸ்டாலின், தோல்விக்கான காரணங்களைச் சரியாகக் கண்டறிந்து, அடுத்தகட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
