அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையேயான மோதல் இப்போது தனிப்பட்ட தாக்குதலாக மாறி உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு மதிய விருந்தின் போது, மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானை ட்ரம்ப் கேலி செய்ததாகத் தெரிகிறது.
குறிப்பாக, 2025-ல் வைரலான ஒரு வீடியோவில் பிரிஜிட் மேக்ரான் தனது கணவரின் முகத்தைத் தள்ளுவது போன்ற காட்சியைச் சுட்டிக்காட்டி, “பிரெஞ்சு அதிபர் இன்னும் அந்தத் தாடையின் அடி வாங்கின அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை” என ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார். இதற்கு தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மேக்ரான், “ட்ரம்ப் அதிகமாகப் பேசுகிறார்; அவருடைய பேச்சு கண்ணியமற்றது மற்றும் தரமற்றது” என மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் பிரான்ஸ் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மாச்சரியங்களைக் கடந்து, மேக்ரானின் எதிர்ப்பாளர்கள் கூட ட்ரம்ப்பின் இந்த அநாகரீகமான பேச்சை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். “உலகத் தலைவர்கள் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கக் கூடாது” என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஈரானுடனான நேட்டோ நாடுகளின் நிலைப்பாட்டை ட்ரம்ப் ‘காகிதப் புலி’ என விமர்சித்து வரும் சூழலில், இப்போது வெடித்துள்ள இந்தப் ‘மனைவி குறித்த தனிப்பட்ட விமர்சனம்’ இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
