உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், எய்ட்ஸ் நோயினால் தனது தாயைப் பறிகொடுத்த 10 வயது சிறுவன், அவரது சடலத்தின் அருகே அமர்ந்து அழுது துடித்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

அதாவது நாக்லா தீரஜ் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு இதே நோயினால் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி அந்தப் பெண்ணும் உயிரிழந்தார்.

பெற்றோரை இழந்த அந்த 10 வயது சிறுவன், தனது தாயின் சடலத்துடன் மாவட்ட தலைமையகத்திற்கு தனியாக வந்துள்ளார். மருத்துவமனையில் தாயின் சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்து அழுதுகொண்டிருந்த அந்தச் சிறுவன், “எனது தந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டபோதே, உறவினர்களும் கிராமத்தினரும் எங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர். இப்போது எனது தாயையும் இழந்துவிட்டேன். அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை” என்று கதறியது அங்கிருந்தவர்களை கலங்க செய்தது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாரிகள் வரும் வரை தனது தாயின் உடலை விட்டு நகர மறுத்த அந்தச் சிறுவனை, மருத்துவமனை ஊழியர்கள் தேற்றினர். எச்.ஐ.வி என்பது மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும். இதற்கு முறையான நிரந்தரத் தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், தொடர் சிகிச்சை மூலம் ஆயுளை நீட்டிக்க முடியும். ஆனால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சமூகம் ஒதுக்கி வைக்கும் அவலம் இன்றும் தொடர்வது இச்சம்பவம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் அந்தச் சிறுவனுக்கு அரசு உரிய பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.