சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சேரன், தமிழ் சினிமாவின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், டப்பிங் படங்களின் வரவால் தமிழ் படங்கள் நசுக்கப்படும் சூழல் உருவானதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த நெருக்கடியான நேரத்தில், “ஆண்டுக்கு 90 நாட்கள் கண்டிப்பாக நேரடித் தமிழ்ப் படங்களைத்தான் திரையிட வேண்டும்; தவறினால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும்” என எம்.ஜி.ஆர் பிறப்பித்த அதிரடி உத்தரவே கோலிவுட்டை காப்பாற்றியதாக சேரன் உருக்கமாகப் பேசினார்.

​தற்போதும் அதே போன்ற ஒரு இக்கட்டான நிலை தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ளதால், எம்.ஜி.ஆரின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை தற்போதைய தமிழக அரசும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் நேரடித் தமிழ்ப் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க இதுவே ஒரே வழி என்று அவர் தனது பேச்சில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். திரையரங்கு உரிமம் தொடர்பான இந்த எச்சரிக்கை மீண்டும் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே தமிழ் திரையுலகம் புத்துயிர் பெறும் என்பது சேரனின் கருத்தாக உள்ளது.