பிரபல நடிகர் எஸ்.வி. சேகர், தனது தந்தை எஸ்.வி. வெங்கடராமனின் பெயரில் தெருவொன்றை தமிழக அரசு பெயரிட்டதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் நேரில் சென்று நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி. சேகர், “முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பின்னால் நிற்பது என் வாழ்நாள் கடமை. 2026 தேர்தலில் திமுகவுக்காக பரப்புரை செய்யத் தயாராக இருக்கிறேன்,” என்றார்.

மேலும், “திமுக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக இருக்கிறது என்றே பேசப்படுவது அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே. முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் முதல்வராக இருக்கிறார். ஜி.எஸ்.டி குறைக்கப்படுவதால் நன்மை என்கிறார்கள். ஆனால், அந்த ஜி.எஸ்.டி.யை முதலில் கொண்டுவந்தவர் யார்? அப்போதே அதைத் தவிர்த்திருந்தால் மக்களுக்கு ஏற்கனவே பெரும் நன்மை ஏற்பட்டிருக்குமே,” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “சினிமாவில் இருந்து நேராக அரசியலுக்கு வருவது எளிதல்ல. எம்.ஜி.ஆர் கோடம்பாக்கத்திலிருந்து நேரடியாக கோட்டைக்கு வரவில்லை. திமுக வளர்ச்சிக்காக 20 ஆண்டுகள் உழைத்த பிறகுதான் தனிக் கட்சி தொடங்கினார். இன்று சிலர், சினிமாவில் பாடல்கள் பாடிய பின் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். மனப்பாடம் செய்தது போல் பேசியும், ‘அங்கிள்’ என்று கூறியும் வாக்குகள் கிடைக்காது, மேலும் இதெல்லாம் கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும், ஓட்டாக மாறாது என நடிகர் விஜயை விமர்சித்தார்.