அரசியல் சுயநலத்திற்காக மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழுக்கு ஓ.பன்னீர்செல்வம் களங்கம் விளைவிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது, “தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே அவரது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் பேசியதை கவனித்தேன்.

கடந்த 30 ஆண்டுகாலமாக அதிமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஓபிஎஸ். அவர் எந்தக் கட்சியில் சேருவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை. அதில் தலையிட முடியாது. ஆனால், சட்டமன்றத்திற்குள்ளேயே தனது ஆதரவு எம்.எல்.ஏ-வை பேசவைத்து, அதன்மூலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகியோரின் புகழுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவித்து வருகிறார்.

தனது சுயநலத்திற்காக அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக, தற்போது தீய சக்திகளிடம் ஓ.பன்னீர்செல்வம் விலை போய்விட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பதவிக்காக எதையும் செய்ய அவர் துணிந்துவிட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.”

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார். ஓபிஎஸ்-ஸின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்து தினகரன் வெளிப்படையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.