மதுரையில் சாலையோரம் கடை வைத்திருந்த முதியவர் ஒருவரை காவல்துறை அதிகாரி அவமதித்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு நகைச்சுவை நடிகர் கேபிஒய் (KPY) பாலா புதிய ஜூஸ் கடை அமைத்துக் கொடுத்து உதவி செய்துள்ளார்.

மதுரையில் வயதான தம்பதியர் ஒருவர் சாலையோரம் சிறிய அளவில் ஜூஸ் கடை நடத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், முறையான அனுமதி இல்லை எனக் கூறி முதியவரின் கடையை காலால் எட்டி உதைத்து, மேஜையைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

 

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரபல நகைச்சுவைப் பேச்சாளர் மதுரை முத்து, தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “பெரிய குற்றவாளிகளையும், போதை ஆசாமிகளையும் விட்டுவிட்டு, பிழைப்பிற்காக ரூ.100 சம்பாதிக்கும் ஏழைத் தொழிலாளியை மிரட்டுவது ஆணவத்தின் உச்சம். ஒரு சில அதிகாரிகளின் செயலால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எளியவர்களிடம் அன்பையும் மனிதநேயத்தையும் காட்டுங்கள்” எனச் சாடியிருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் நடிகர் கேபிஒய் பாலாவிற்கு தகவல் அனுப்பினர். எப்போதும் சமூக சேவையில் ஆர்வம் காட்டும் பாலா, உடனடியாக மதுரைக்கு விரைந்து அந்த முதியவரைச் சந்தித்தார். காவல்துறை அப்புறப்படுத்திய அந்தப் பழைய கடைக்கு மாற்றாக, அழகிய புதிய ஜூஸ் கடை ஒன்றை அமைத்துக் கொடுத்தார். மேலும், கடையை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட செலவுகளுக்கும் பண உதவி செய்துள்ளார். இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பாலா, “கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்காக என்னால் முடிந்த சிறு உதவி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறுவன் முதல் பெரியவர் வரை பலருக்கும் உதவி வரும் பாலாவின் இந்தச் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் அதிகார துஷ்பிரயோகம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், மறுபுறம் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை இச்சம்பவம் மெய்ப்பித்துள்ளது.