இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தனது ஆட்டம் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் மிகவும் வெளிப்படையாகவும் அதிரடியாகவும் பேசி இருப்பது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

​தனது வயது மற்றும் ஓய்வு குறித்துப் பேசிய அவர், “எனக்கு இப்போது 31 வயதாகிறது, இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே நான் கிரிக்கெட் விளையாடுவேன். எனவே, இனிவரும் காலங்களில் என்னுடைய விருப்பப்படிதான் களத்தில் விளையாடுவேன்” என்று மிகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

​மேலும் தனது ஆட்ட உத்தி குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், “நான் எப்படி ஆட வேண்டும் என்று யாரும் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை. சஞ்சுக்கான ஆட்டத்தை சஞ்சுதான் முடிவெடுப்பான். அதில் மாற்றமே இல்லை” என்று விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

​அதேவேளையில் அணிக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்றும் கூறியுள்ள அவர், “நான் அணிக்கு முழுமையான ஆதரவாக இருப்பேன். ஆனால், ஆடுகளத்தில் எல்லாமே என்னுடைய வழியில்தான் நடக்கும்” என்று மிகவும் கெத்தாகத் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.