கர்நாடக மாநிலம் தாவங்கேரேயில் தனது மனைவியின் திடீர் மரணத்தை சமாளிக்க முடியாமல் மனதளவில் துயரத்தில் இருந்த 32 வயது உடய் என்பவர், தனது இரு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உதயின் மனைவி இதயநோயால் மரணமடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் கடுமையான மன அழுத்தத்தில் சிக்கி தவித்து வந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியர், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மரணம் அவருக்கு மனதளவில் தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து உதய் தனது நான்கு வயது மகளையும், மூன்று வயது மகனையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.  இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். பின்பு போலீசார் வந்து சோதனையிட்டதில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில், “நான் என் மனைவியை இன்னும் நேசிக்கிறேன். இப்போது என் குழந்தைகளுடன் சேர்ந்து அவளிடம் போகிறேன்” என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.