உலக அளவில் சமூக ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா , தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘Meta AI’ தளத்தில் டீன்-ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மிக முக்கியமான மற்றும் விசித்திரமான புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றைய தலைமுறை டீன்-ஏஜ் பிள்ளைகள் தங்களது தனிப்பட்ட உணர்வுகளைப் பெற்றோரிடம் பகிர்வதை விட, மெட்டா ஏஐ சாட்பாட்களுடன் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அவ்வாறு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் மெட்டா ஏஐ உடன் உரையாடும் ஒரு குழந்தை, தற்கொலை அல்லது சுய தீங்கு தொடர்பான ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டால், அதன் தீவிரம் மற்றும் உணர்வுகளை ஏஐ தொழில்நுட்பம் உடனடியாகக் கண்டறியும்.
அவ்வாறு ஏதேனும் ஆபத்தான எண்ணங்களுடன் குழந்தை உரையாடுவது கண்டறியப்பட்டால், உடனடியாக அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு இன்ஸ்டாகிராம் கண்காணிப்புத் துணைக் கருவிகள் மூலமாக ஒரு அலர்ட் மெசேஜ் அனுப்பி வைக்கப்படும். இது மட்டுமல்லாமல், அத்தகைய ஆபத்தான சூழலில் இருக்கும் தங்கள் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் எவ்வாறு பேசி, அவர்களுக்கு மனரீதியான ஆதரவை வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் மெட்டா நிறுவனம் உளவியல் நிபுணர்களின் உதவியுடன் வழங்குகிறது.
முதற்கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சம், இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. பிள்ளைகளின் உயிரைக் காக்க மெட்டா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை உலகளவில் உள்ள பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
