எக்ஸ் (X) வலைதளத்தில் இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி, ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் திகைக்க வைத்துள்ளது. ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய தனது நண்பனுக்காக சிஎம் செல்லில் (CM Cell) புகார் அளித்த 5-வது நாளிலேயே அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமாக வந்த பதிலும், அதிரடி நடவடிக்கையும் தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக அந்த இளைஞர்கள் தங்களது நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர்.

​அந்த வீடியோவில் பேசும் இரு இளைஞர்களில் ஒருவருக்கு ‘ஆட்டோ இம்யூன்’ (Autoimmune) என்ற அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்காக அவர் மாதம் ஒரு குறிப்பிட்ட இன்ஜெக்ஷன் (ஊசி) கட்டாயம் போட்டாக வேண்டும். ஒருவேளை அந்த ஊசியைப் போடவில்லை என்றால், அந்த இளைஞரின் உயிருக்கே பேராபத்து ஏற்படும் என்ற இக்கட்டான சூழல் நிலவி வந்துள்ளது. இதனால், கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து அந்த இன்ஜெக்ஷனை அவர் போட்டு வந்துள்ளார்.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இந்த ஊசியைப் போடச் சென்றபோது, அங்கு மருந்து இருப்பு இல்லை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எப்பொழுது கிடைக்கும் எனக் கேட்டதற்கு, “மூன்று நாட்கள் கழித்து வாருங்கள், கிடைக்கலாம்” என உறுதியற்ற பதிலே கிடைத்துள்ளது.

​”கடந்த ஆறு மாதங்களாக முந்தைய திமுக ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைத்த மருந்து, இப்போது புதிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கிடைக்காமல் போகிறதே” என யோசித்த அந்த இளைஞர்கள், உடனடியாக சிஎம் செல்லில் இது குறித்துப் புகார் அளித்துள்ளனர். என்ன ஆச்சரியம்! புகார் அளித்த 5-வது நாளிலேயே சிஎம் செல் பிரிவிலிருந்து அந்த இளைஞர்களுக்கு எழுத்துப்பூர்வமாக, கையால் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று நேரடியாகக் கிடைத்துள்ளது.

அதில், “உங்களுக்குத் தேவையான 20 மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் நேராகச் சென்று அதைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது மருத்துவமனைக்குச் சென்று நேரடியாகப் போட்டுக் கொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

​தங்களது உயிருக்கு ஆபத்தான புகாரைக் கையில் எடுத்து, இவ்வளவு விரைவாகத் தீர்வு கொடுத்த தவெக அரசை அந்த இளைஞர்கள் தங்களது வீடியோவில் வாயாரப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, “உண்மையிலேயே சொல்லணும்னா, இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மெத்தட் இதுவரைக்கும் எந்த ஒரு ஆட்சியிலுமே இருந்தது கிடையாது; இது ரொம்பவே ஒரு பெரிய விஷயம்” என்று தவெக அரசின் இந்த அதிவேக செயல்பாட்டு முறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பாராட்டியுள்ளனர்.

“சிஎம் செல்லில் செய்யும் புகாருக்கு இவ்வளவு வேகமாகவும், துரிதமாகவும் ஆக்ஷன் ரிப்ளை கிடைக்கும்னு நாங்க கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என்று நெகிழ்ச்சியோடு பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது தவெக ஆதரவாளர்கள் மத்தியிலும் இணையத்திலும் வைரலாகப் பரவி வருகிறது.