உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள நைனி மேம்பாலத்தில் (Naini Overbridge) யாரும் எதிர்பாராத வகையில் ஒரு விசித்திரமான காதல் விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலுக்காக ஒன்றாக உயிரை விடலாம் என்று முடிவெடுத்து மேம்பாலத்திற்கு வந்த ஜோடியில், காதலன் மட்டும் கீழே இருந்த ரோட்டில் குதிக்க, கடைசி நேரத்தில் காதலி பின்வாங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தின் மேலே வந்த காதலனும் காதலியும், தற்கொலை செய்து கொள்வதற்காகக் கீழே குதிக்கத் தயாராக நின்றுள்ளனர். ஆனால், கவுண்ட்டவுன் முடிந்து காதலன் மேம்பாலத்திலிருந்து கீழே இருந்த ரோட்டில் குதித்த அடுத்த நொடி, பயந்துபோன காதலி தற்கொலை முடிவை அப்படியே கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, மேம்பாலத்திலிருந்து கீழே இருந்த ரோட்டில் குதித்த அந்த வாலிபர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் கீழே விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதல் வெறியில் ரோட்டில் குதித்த காதலன், தற்போது சிகிச்சைப் பெற்று உயிர் பிழைத்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறும்போது, “இரண்டு பேரும் பாலத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு ஒன்றாகக் கீழே குதிப்பதற்குத்தான் ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென அந்தப் பையன் மட்டும் தனியாகக் குதித்துவிட்டான், அந்தப் பொண்ணு பயந்து ஓடிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
