கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற உயர்ரக அடுக்குமாடி குடியிருப்பில், கணவன், மனைவி மற்றும் அவரது பெண் தோழிக்கு இடையே நடந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு நிலவி வரும் நிலையில், கணவனின் பெண் தோழி குடியிருப்பு வளாகத்தில் உள்ள தனது வீட்டை  காலி செய்து சாமான்களை மாற்றியுள்ளார்.

அதற்கு உதவி செய்வதற்காக அந்த நபர் அங்கு வந்திருந்த விஷயம் எப்படியோ மனைவக்குத் தெரியவர, அவரும் உடனடியாக அந்த இடத்திற்குத் தேடிச் சென்றுள்ளார். அங்கே தனது கணவரை அந்தப் பெண்ணுடன் பார்த்த ஆத்திரத்தில் இரு பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

மனைவி மற்றும் கணவனின் பெண் தோழி இருவரும் நடுரோட்டில் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்து, மாறி மாறி அடித்துக்கொண்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கிவிட முயன்றாலும், அந்த உயர்ரக குடியிருப்பு வளாகத்தில் சிறிது நேரம் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்த வெட்கக்கேடான மோதலை அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது கைப்பேசியில் 12 விநாடிகள் கொண்ட வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர், இரு தரப்பினரையும் விசாரிப்பதற்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆரம்பத்தில் இரு தரப்பினரும் எந்தவிதமான எழுத்துப்பூர்வமான புகாரும் அளிக்க விரும்பவில்லை என்றும், தாங்களே பேசிப் பேசித் தீர்த்துக்கொள்வதாகவும் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இருப்பினும், சமூக வலைதளங்களில் இந்தச் சண்டை வீடியோ வைரலாக பரவி வருவதைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட காவல் துறை, வீடியோவை வெளியிட்டது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, உரிய புகார் அளித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.