இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பங்கேற்றதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனக்கு நெருக்கடி அளித்ததாகவும், அதன் விளைவாகவே தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டராகத் திகழ்ந்த பீட்டர்சன், கடந்த 2004-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 136 ஒருநாள் போட்டிகள் மற்றும் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகச் செயல்பட்டு வரும் பீட்டர்சன், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது கரியர் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
“நான் பெரிய தியாகங்களைச் செய்தேன். அதனால் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தேன். ஐபிஎல் விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் (ECB) இருந்த அனைவரும் எனக்கு எதிராகச் செயல்பட்டார்கள். நான் 33 வயதிலேயே 104 டெஸ்ட் போட்டிகளோடு ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவானது.
உண்மையைச் சொல்லப்போனால், நான் 150 முதல் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்திருக்க வேண்டும். ஆனால், வாரியம் அங்குள்ள பத்திரிகைகளைப் பயன்படுத்தி எனக்கு எதிராகச் செய்திகளைப் பரப்பி என்னை தனிமைப்படுத்தியது. அதைப் பற்றி இப்போது அதிகம் பேச விரும்பவில்லை. தற்போது நான் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க அந்நாட்டு வாரியம் பல்வேறு தடைகளை விதித்தது. 2009-இல் மூன்று வாரங்கள் மட்டுமே விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக பீட்டர்சன் விளையாடினார்.
நாட்டின் டெஸ்ட் போட்டிகளை விட ஐபிஎல் தொடருக்கு பீட்டர்சன் முக்கியத்துவம் அளிப்பதாக வாரியம் குற்றம் சாட்டியது. இதுவே அவருக்கும் இங்கிலாந்து வாரியத்திற்கும் இடையே தீராத மோதலாக வெடித்தது. இதன் காரணமாகவே அவர் தனது 33 வயதிலேயே அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
