ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள வைஷாலி நகர் பகுதியில், மூன்று வயது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் அவரது லிவ்-இன் காதலருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அஜ்மீர் போலீசில் பணியாற்றும் கான்ஸ்டபிள் கோவிந்த் சர்மா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து சென்ற ஒரு ஆணும் பெண்ணும் அவரின் கவனத்தை ஈர்த்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தபோது, அந்த பெண் தன்னுடைய குழந்தை காணாமல் போய்விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இருவரையும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அந்த பெண் ப்ரியா என்றும், அவரது லிவ்-இன் காதலனின்  பெயர் அல்கேஷ் என்றும் தெரியவந்தது. ப்ரியா உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து, ப்ரியா தனியாக அஜ்மீரில் வசித்து வந்துள்ளார். அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளர் வேலை செய்து வந்த ப்ரியாவுக்கு, அதே ஓட்டலில் பணியாற்றும் அல்கேஷுடன் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் லிவ்-இன் முறையில் வாழத் தொடங்கியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளில், ப்ரியா தனது குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் ஆனா சாகர் ஏரி அருகே நடந்து செல்வது பதிவாகியுள்ளது. அதில், இரவு 1.30 மணி அளவில் ப்ரியா மட்டும் குழந்தையின்றி பின்னர் அந்த வழியே மீண்டும் நடந்து செல்வது தெரிகிறது. இதனால், போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. அடுத்த நாள் காலை, அந்த ஏரியில் 3 வயது குழந்தையின் இறந்த உடல் மீட்கப்பட்டது. பின்னர், ப்ரியாவிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் தான் தனது குழந்தையை ஏரியில் தூக்கி வீசி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

விசாரணையின் போது, ப்ரியா தெரிவித்ததாவது: “எனது குழந்தை என் லிவ்-இன் காதலர் அல்கேஷுக்கு பிடிக்கவில்லை. குழந்தை இருப்பதால் உறவில் இடையூறு ஏற்பட்டது. அதனால், என் காதலருக்காகவே என் குழந்தையை நான் தான் கொலை செய்யத் தீர்மானித்தேன்” என தெரிவித்துள்ளார். இதற்கமைய, கடந்த இரவு குழந்தைக்கு உணவு கொடுத்து தூங்க வைத்த ப்ரியா, பின்னர் குழந்தையை தூக்கிச் சென்று ஏரியில் வீசி விட்டதாகவும், பின்னர் அல்கேஷிடம் “குழந்தை காணவில்லை” என கூறி, குழந்தையை தேடும் நாடகத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ப்ரியாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்து, கொலை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேசமயம், இந்த கொலையில் அல்கேஷுக்கும் நேரடி அல்லது மறைமுக தொடர்பு உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.