நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் சிங் என்ற இளைஞர் மாயமானார். நேபாளத்தின் திரிசூலி பகுதியில் 216 மெகாவாட் மின்திட்டப் பணிக்காக அமைக்கப்பட்ட சுரங்கத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வெள்ளநீர் புகுந்தது. நீருடன் அடித்துவரப்பட்ட சேறும் சகதியும் சுரங்கத்துக்குள் புகுந்ததில் ராகுல் அதில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்ற நிலையில், ஏழு நாட்களாகியும் ராகுலின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் மகனை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கையில் காத்திருந்த குடும்பத்தினரின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ராகுலுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. குழந்தை இல்லாத நிலையில், கணவர் எப்போது திரும்பி வருவார் என அவரது மனைவி கண்ணீருடன் காத்திருந்தார். ஆனால், இறுதியில் கணவரின் உடலையே பார்க்க முடியாத நிலை அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
“நேபாளத்தின் வெள்ளம் எங்கள் ராகுலை விழுங்கிவிட்டது” என அவரது மனைவி கதறி அழுதது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏழு நாட்களாகியும் உடல் கிடைக்காததால், இந்து மத வழக்கப்படி தர்ப்பைப் புல்லால் ராகுலின் உருவத்தை உருவாக்கி அதனை அவரது குடும்பத்தினர் இறந்த உடலாகக் கருதி இறுதிச்சடங்கு செய்தனர். மகனின் உடலைக் காணாமல் அவரது தந்தை தர்ம சிங் அந்தப் புல்லால் செய்யப்பட்ட உருவத்துக்கு இறுதிச்சடங்கு செய்து தீ மூட்டினார். மகனின் முகத்தை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் தந்தை இறுதி விடை கொடுத்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
நேபாளத்தில் வேலை செய்து வரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இந்த வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ளனர். கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பல குடும்பங்கள் தங்களது உறவினர்களைத் தேடி நேபாளத்தில் அலைந்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு மகனை இழந்த துயரம் என்றால், மற்றொரு பக்கம் கணவனை இழந்த வேதனை என ராகுலின் குடும்பத்தை நேபாள வெள்ளம் நிலைகுலையச் செய்துள்ளது. உடல் கிடைக்காத நிலையிலும், மகனுக்காக தந்தை செய்த இறுதிச்சடங்கு அந்தக் குடும்பத்தின் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
