திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா, மேடையிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விடுத்த அதிரடி கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மேடையில் பேசிய ஆ.ராசா, “ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திமுகவுடன் கூட்டணியே இல்லை என்கிறார்.
திமுக கூட்டணியில் நீங்கள் இல்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது; ஆனால் ‘கூட்டணியே இல்லை’ எனச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்ன அதிக பிரசங்கித்தனம்? கூட்டணியில் தொடர்கிறோமா, இல்லையா என்பதை அறிவிக்க பொதுக்குழுவைக் கூட்டுகிறாராம். இவர் சென்றால் அப்படியே ஒரு லட்சம் பேர் கூடுவது போல் பேசுகிறார்” என்று மிகக் காட்டமாகச் சாடினார்.
மேலும், கூட்டணி விவகாரத்தில் திமுக தன் பலத்தைக் காட்ட வேண்டும் என வலியுறுத்திய அவர், “இனிமேல் யாருடனும் திமுக கூட்டணி இல்லை; ‘இனி தனித்து நின்று வெற்றிபெறும்’ என அறிவியுங்கள். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்கும்” என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் மேடையிலேயே பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். கூட்டணி கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆ.ராசா பேசிய இந்த அதிரடி பேச்சு, தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை உக்கிரப்படுத்தியுள்ளது.
